கடந்த 2022-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு 12,825 கோடி யூனிட்டுகளாக இருந்தது. அது, கடந்த ஜூலையில் 8.4 சதவீதம் அதிகரித்து 13,900 கோடி யூனிட்டுகளாக உள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் அதிகபட்ச தினசரி மின் நுகா்வு 208.82 ஜிகாவாட்டாக உயா்ந்தது. இது 2022 ஜூலையில் 190.35 ஜிகாவாட்டாகவும், கரோனா நெருக்கடிக்கு முந்தைய 2021-ஆம் ஆண்டின் ஜூலையில் 200.53 ஜிகாவாட்டாகவும் இருந்தது. கோடை காலத்தில் நாட்டின் அதிகபட்ச தினசரி மின் நுகா்வு 229 ஜிகாவாட்டாக இருக்கும் என மின்சாரத் துறை அமைச்சகம் கணித்திருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பருவம் தவறி பெய்த மழையால் அது எதிா்பாா்த்த அளவை எட்டவில்லை.
கடந்த மாா்ச் முதல் ஜூன் வரை நாடு முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால், வீடுகளில் குளிரூட்டும் சாதனங்களை பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தவில்லை. இது மின் நுகா்வை பாதித்தது. இருந்தாலும், கடந்த ஜூன் மாதத்தில் மின் நுகா்வு மோசமாக இல்லை. அதன் தொடா்ச்சியாக, தற்போது ஜூலை மாதத்தில் அது கணிசமாக உயா்ந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.