சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லத்தில் சூரிய ஒளியின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக தினமும் 500 கிலோ நீராவியும்,
550 யூனிட் மின்சாரமும் தயாரிக்கப்பட்டு சாதனை செய்து வருகிறது. இந்த மாணவர் இல்லத்தில் பெற்றோரை இழந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களின் பள்ளிக் கல்வியையும், தொழில்நுட்பக் கல்வியையும் பயின்று வருகின்றனர். சூரிய மின்சக்தி மூலம் நீராவியை உற்பத்தி அதன் உதவியால் காலையில் சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி, இரவு உணவு ஆகியவை தினந்தோறும் தயாரிக்கப்படுகிறது. இதனால், ஒரு நாளுக்கு தேவையான 25-30 கிலோ சமையல் எரிவாயு மிச்சப்படுத்தப்படுகிறது. மீதமுள்ள நீராவியை கலனில் சேமித்து அதற்கடுத்த நாள்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
இது தொடர்பாக இந்த இல்லத்தின் சூரிய மின்சக்தி அமைப்பின் பொறுப்பாளர் சந்திரசேகரன் மஹராஜ் செய்தியாளர்களிடம் கூறியபோது, “சூரிய ஒளி நீராவி அடுப்பின் மூலம் 500 முதல் 550 கிலோ நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பால், சாதம், சாம்பார், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் தினந்தோறும் சமைக்கப்படுகின்றன. நாள்தோறும் 550 யூனிட் மின்சாரம்: இந்த இல்லத்தில் அண்மையில் 115 கிலோவாட் (“சோலார் போட்டோ வோல்டிக்’) சூரிய மின் சக்தி அமைப்பு நிறுவப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் நாளொன்றுக்கு 550 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் ராமகிருஷ்ண மிஷன் இல்லத்தின் 85 சதவீத மின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக இங்குதான் எல்.டி.சி.டி. முறை சூரிய மின்சக்தியை அளவிடும் “நெட்’ மீட்டர்கள் இங்குதான் அறிமுகப்படுத்தப்பட்டன. “நெட்’ மீட்டர்கள் மூலம் தேவைக்கும் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்ட சூரிய ஒளி மின்சாரம் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு தரப்படுகிறது என்று கூறினார். மேலும் “சன் எடிசன்’ என்ற கம்பெனி சூரிய ஒளி மின்சக்தித் தகடுகளின் அமைப்பை இலவசமாக மிஷன் மாணவர் இல்லத்துக்கு அமைத்து வழங்கினர். இதன் பராமரிப்பு மிகவும் எளிமையாகவும், விலை குறைவாகவும் உள்ளது. மேலும், பல சூரிய மின்சார அமைப்புகளை நிறுவ மாணவர் இல்லம் முயற்சித்து வருகிறது. இங்குள்ள அமைப்புகளை பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் பார்வையிட்டு ஆலோசனைகளைப் பெற்றுச் செல்கின்றனர். வளரும் மாணவர் சமுதாயத்திற்கு மரபு சாரா எரிசக்தியை அன்றாட வாழ்வில் வெற்றிகரமாக எவ்வாறு பயன்படுத்த முடியும் என்று காட்டுவதே எங்கள் இல்லத்தின் நோக்கம்’ என்று அவர் கூறினார்.
English summary-550 units Electricity daily from solar panels in chennai school