கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு நேற்றுடன் முழுமையாக முடிவடைந்தது. தமிழகத்தில் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்களை சேர்க்க அண்ணாபல்கலைக்கழகம் கலந்தாய்வை நடத்தியது. மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் இந்த கலந்தாய்வை நடத்தினார். நேற்றுடன் முடிவடைந்த இந்த கலந்தாய்வின் மூலம் மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 968 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில் இதுவரை 94 ஆயிரத்து 453 பி.இ. இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில் மெக்கானிக்கல் பாடப்பிரிவில் அதிகளவாக 26,942 பேர் சேர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.
அடுத்ததாக இ.சி.இ. பிரிவில் 18,707 பேரும் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 15089 பேரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 15,056 பேரும் இ.இ.இ. பிரிவில் 12,384 பேரும் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் இ.சி.இ. பாடப்பிரிவில்தான் அதிக இடங்கள் காலியாக கிடக்கின்றன. அந்த பிரிவில் 21,132 இடங்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் 16,779 இடங்களும், மெக்கானிக்கல் பாடப்பிரிவில் 16,587 இடங்களும் நிரம்பாமல் உள்ளன. 33 கல்லூரிகளில் 60 சதவீத அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பவில்லை.
பொறியியல் மாணவர் சேர்க்கை முடிந்து விட்ட நிலையில் நேற்றுய் முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள கிண்டி பொறியியல் கல்லூரியிலும் நேற்று வகுப்புகள் தொடங்கின. இணைப்பு கல்லூரிகளை பொறுத்தவரை ஏராளமான கல்லூரிகள் ஏற்கனவே திறந்து விட்டன.
பொறியியல் கல்லூரி கலந்தாய்வு குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம், பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முழுக்க உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அண்ணா பல்கலைக்கழகம் கடந்த மாதம் முழுவதும் கலந்தாய்வை நடத்தியது. ஒட்டு மொத்த கலந்தாய்வும் நேற்றுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக 4 கல்லூரிகள், அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் பி.இ., பி.டெக்., பி.ஆர்க். ஆகிய படிப்புகளின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிவிட்டது’ என்று கூறினர்.
மேலும் என்ஜினீயரிங் முதுநிலை படிப்பில் (எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்.) சேர்வதற்கான கலந்தாய்வு நேற்று முதல் அண்ணாபல்கலைக்கழகத்தில் தொடங்கியுள்ளதாகவும் ‘கேட்’ (கிராஜூவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் என்ஜினீயரிங் ) தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளும், பின்னர் ‘கேட்’ தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சாதாரண மாணவ-மாணவிகளும் கலந்துகொள்கிறார்கள் என்றும் எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். முதல் ஆண்டு வகுப்புகள் 17-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
English Summary:Engineering counseling ended.Mechanical engineering topped Group.