பிளஸ் 2 முடித்துவிட்டு பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கடந்த 1ஆம் தேதியில் இருந்து கலந்தாய்வு நடந்து வருகின்றது. இந்த கலந்தாய்வில் பெரும்பாலான மாணவர்கள் எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் என்று சொல்லப்படும் ECE பிரிவை தேர்வு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தற்போது சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வில் இதுவரை 29,344 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் ECE பிரிவை 6,058 மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக மெக்கானிக்கல் பிரிவை 5,489 மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். மூன்றாவதாக கணினி அறிவியலை 3,995 மாணவ மாணவிகள் தேர்வு செய்துள்ளனர். நான்காவதாக 3,594 மாணவர்கள் EEE பிரிவில் சேர்ந்துள்ளனர்.
கலந்தாய்வு தொடங்கியது முதல் மாணவர்களின் விருப்ப பாடமாக மெக்கானிக்கல் பிரிவும் மாணவிகளின் விருப்ப பாடமாக ECE பிரிவும் இருந்து வருகிறது. மாணவர்களை பொருத்தவரையில் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்தால் மெக்கானிக்கல் சம்பந்தப்பட்ட துறையிலும் சேரலாம், ஐடி துறையிலும் பணியில் சேரலாம் என்பதால் மாணவர்களிடம் இப்பிரிவு அதிக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த எட்டு நாட்களில் 5,366 மாணவர்கள் மெக்கானிக்கல் பிரிவை தேர்ந்தெடுத்துள்ளனர். அடுத்ததாக ECE பிரிவை 1647 மாணவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மாணவிகளைப் பொருத்தவரையில் கணினி சார்ந்த பணியிலேயே சேர விரும்புவதால், ECE மற்றும் கணினி அறிவியல் பிரிவில் சேர அவர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இது வரை 14,040 மாணவிகளுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதில் 4,472 மாணவிகள் ECE பிரிவில் சேர்ந்துள்ளனர். கணினி அறிவியல் பிரிவை 2,593 மாணவிகள் தேர்ந்தெடுத்துள்ளனர்.
நேற்று மதிய நிலவரப்படி ECE பிரிவில் அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஐ.டி, கோவை ஜி.சி.டி கல்லூரி, பி.எஸ்.ஜி கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி, சேலம் அரசு பொறியியல் கல்லூரி, மதுரை தியாகராஜா கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லை. அதே போன்று மெக்கானிக்கல் பிரிவிலும் அண்ணா பல்கலைக் கழகம், கோவை ஜி.சி.டி கல்லூரி, பி.எஸ்.ஜி கல்லூரி, கோவை தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் காலியிடங்கள் இல்லை.
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, ஏசி டெக் கல்லூரி, எம்.ஐ.டி மற்றும் கட்டிட கலை மற்றும் திட்டக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஐந்து சதவீத இடங்கள் வெளிநாட்டவருக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் வெளிநாட்டவருக்கான கலந்தாய்வு நேற்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இன்று வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
English Summary:Engineering counseling .Students what inspires categories