பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு கடந்த 1ஆம் தேதி முதல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த கலந்தாய்வு நேற்று 28ஆம் தேதியுடன் முடிவடைந்தது. கடந்த 28 நாட்களில் ஒரு லட்சத்து ஆயிரத்து 620 மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளதாகவும், இதுபொக இன்னும் 91 ஆயிரத்து 473 இடங்கள் காலியாக உள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் கடைசி நாளான நேற்று மொத்தம் 5,680 பேர் அழைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால், கலந்தாய்வில் 3,299 மட்டுமே கலந்து கொண்டு ஒதுக்கீட்டு ஆணையை பெற்றதாகவும் மீதி ,2,326 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் கலந்தாய்வு மூலமாக ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 93 இடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கடந்த 28 நாட்களில் பொது கலந்தாய்வு மூலமாக ஒரு லட்சத்து ஆயிரத்து 620 மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.
பொது கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில்,91 ஆயிரத்து 473 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் பொது கலந்தாய்வை தொடர்ந்து தொழிற்கல்வி மாணவர்களுக்கான 2 நாள் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பாடப்பிரிவை அதிக மாணவர்கள் தேர்வுசெய்துள்ளனர். இப்பிரிவில் 25,355 இடங்கள் நிரம்பியுள்ளன. மெக்கானிக்கல் பிரிவை தொடர்ந்து, எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பிரிவை 18,069 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் பாடப்பிரிவை 14,538 பேரும் தேர்வுசெய்திருக்கிறார்கள். தமிழ்வழி சிவில் இன்ஜினீயரிங் பிரிவில் மொத்தமுள்ள 660 இடங்களில் 280 இடங்களும், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பிரிவில் 719 இடங்களில் 278 இடங்களும் நிரம்பியுள்ளன.
English Summary : Engineering Counselling conducted for 28 days in Anna University Chennai. Out of 1 lakh 620 thousand seats 91,473 remained vacant.