சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் இந்தியாவில் உள்ள 100 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 100 நகரங்களை தேர்வு செய்யும் பணியில் மத்திய அரசு அதிகாரிகள் இருக்கும் நிலையில் இவற்றில் சென்னை அருகேயுள்ள எண்ணூர் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய நகரங்கள் இணையவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
உலகில் ஸ்மார்ட் சிட்டிகள் சீனா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் மட்டுமே உள்ளன. இந்தியாவில் முதல் ஸ்மார்ட் சிட்டியாக அகமதாபாத் அருகே உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2011ஆம் ஆண்டே இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்தப் பணிகள் 2021 ஆம் ஆண்டு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் வரும் 2022ஆம் ஆண்டுக்குள் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நவீன நகரமாக்கும் திட்டத்தால் ஒவ்வொரு நகரிலும் சுமார் 5 லட்சம் மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.