சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் பூங்கா ரயில் நிலையம் இடையே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்துள்ள நகரும் படிக்கட்டுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
சமீபத்தில் சென்னை சென்ட்ரல் மற்றும் பூங்கா நகர் ரயில் நிலையம் இடையே மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகளும், நிலையக் கட்டுமானப் பணிகளும் விறுவிறுப்பான நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளின் காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒருசில பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையம், பூங்கா ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் சிரமம் இன்றி செல்வதற்கும், சாலையை கடந்து செல்வதற்கும் அந்தப் பகுதியில் தற்காலிகமாக மேம்பால நடைமேடை ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் அமைத்தனர். இதற்கு சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் தற்போது அதே பகுதியில் நகரும் படிகட்டுகளையும் ரயில்வே நிர்வாகம் அமைத்து பொதுமக்களை மேலும் அசத்தியுள்ளது.
இந்த நகரும் படிக்கட்டுகள் கடந்த 6ஆம் தேதி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் இந்த நகரும் படிக்கட்டுகள் முதியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் பெரும் பயன் தரும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்ட்ரல், பூங்கா நகர், பொது மருத்துவமனை ஆகியபகுதிகளை இணைக்கும் சுரங்க பாதையில் நெரிசல் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க ரூ.20 கோடி செலவில் புதிய ஆகாய நடைபாதை அமைக்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரசு பொது மருத்துவமனை, சென்ட்ரல் ரயில் நிலையம் உள்பட 10 முக்கிய இடங்களை இணைக்கும் வகையில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 1.6 கி.மீ. தொலைவுக்கு ஆகாய நடைமேடையை அமைப்பதற்கான ஆய்வுகள் ஏற்கனவே சி.எம்.டி.ஏ. அதிகாரிகளால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்படி, சென்னை மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியவற்றுடன் இந்தத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்த ஆகாய நடைமேம்பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என்றும் இந்த ஆகாய நடைமேடை திட்டப் பணிகள் முடிவடைந்தால் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் வாகன நெரிசலில் சிக்காமல் எளிதாக மருத்துவமனைக்கு வர முடியும் என்றும் தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary : Escalators are placed in Chennai Central and to be placed on different places where much congestion among people.