தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்களில் 10,674 பேர் தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தச் சங்கத்தின் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.

இதில் தேர்தலில் சங்கத்தின் புதிய மாநிலத் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர்கள் 2 பேர் ஆகியோர்களை தேர்வு செய்ய அதன் உறுப்பினர்கள் வாக்களித்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள் அனைத்தும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள செவிலியர் அலுவலகத்திற்கு பாதுகாப்புடன் நேற்று வைக்கப்பட்டது. இன்று இந்த வாக்குகள் எண்ணும் பணி நடைபெறவுள்ள நிலையில், திடீரென சங்க உறுப்பினர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை செய்த பின்பே வாக்குகளை எண்ண அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெறாது என்று கூறப்படுகிறது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என செவிலியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.