புதை சாக்கடையை தூய்மை செய்யும் தொழில்நுட்பம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட போட்டியில் சென்னை குடிநீர் வாரியத்துக்கு மத்திய அரசின் பரிசு கிடைத்துள்ளது.
இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதை சாக்கடையில் மனிதர்கள் இறங்காமல் சுத்தம் செய்வதற்கான “தொழில்நுட்ப சவால் ‘ என்ற போட்டியை மத்திய
அரசின் வீட்டு வளர்ச்சி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் அம்ருத் திட்டத்தின் கீழ் அறிவித்திருந்தது.
இந்த போட்டியில் சென்னைக் குடிநீர் வாரியம் கழிவுநீர் குழாய்களை பந்து கடத்தும் முறையில் இயந்திரங்களின் வழியாக சுத்தம் செய்வது குறித்த பரிந்துரையுடன் பங்கேற்றது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசின் வீட்டு வளர்ச்சி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் மத்திய பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பின் நடுவர் குழு உறுப்பினர் சத்தீஷ் குமாரை சென்னைக்கு அனுப்பி வைத்திருந்தது. புதை சாக்கடையில் ஆள்கள் இறங்காமல் பந்து கடத்தும் முறையில் இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்வதற்கான செயல் முறை விளக்கத்தினை உறுப்பினர் முன்னிலையில் சென்னைக் குடிநீர் வாரியம் செய்து காட்டியது.
இந்த செயல்முறை விளக்கத்தை ஆவணப் படமாக தயாரித்து தில்லிக்கு எடுத்துச் சென்று மற்ற போட்டியாளர்களின் ஆவணங்களுடன் பரிசீலனை செய்து, போட்டியில் பங்கேற்றவர்களில் சென்னைக் குடிநீர் வாரியத்தினை ஆறு வெற்றியாளர்களில் ஒருவராகத் தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டது.
உலக கழிப்பறை தினத்தினை முன்னிட்டு தில்லி விக்யான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்னைக் குடிநீர் வாரியத்துக்கான பரிசை (ரூ.1 லட்சம்) வழங்கினார். இந்தப் பரிசை சென்னை குடிநீர் வாரிய பொறியியல் இயக்குநர் ஆர்.சிவசண்முகம் பெற்றுக் கொண்டார். இந்த பரிசைப் பெறுவதற்காக முயற்சிகளை எடுத்துக் கொண்ட பொறியாளர்கள் குழுவினரை சென்னை குடிநீர் வாரியத்தின் நிர்வாக இயக்குநர்அஷோக் டோங்ரே பாராட்டினார்.