சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுகிறது. கார்த்திகை மாதத்தில் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து, இருமுடி கட்டி பலரும் வந்து செல்கின்றனர்.
ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், 6 நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியது. இதனிடையே, சன்னிதானம் அருகே பதினெட்டு படி ஏறி வரும்போது பக்தர்களுக்கு மூச்சு திணறல், நெஞ்சுவலி போன்ற திடீர் உடல் நலகுறைவு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க அவசர சிகிச்சை மையமும், கட்டுப்பாடு அறையும் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் சாமி தரிசனம் செய்ய கூடுதலாக ஒரு மணிநேரம் அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, மாலை நேரத்தில் 4 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், இன்று முதல் மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.