மதுரை: தமிழகத்தில் காலியாக உள்ள கணினி அறிவியல் ஆசிரியர்களுக்கான 814 பணியிடங்களை உடனே நிரப்ப கணினி ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
பி.எட். கணினி அறிவியல் பட்டதாரிகள் கூட்டமைப்பு சார்பில், தருமபுரி, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், பின்வருமாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிதாக உருவாக்கப்பட்ட 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு மட்டும் ரூ. 7500 சம்பளத்தில் இளங்கலை மற்றும் பி.எட். பட்டம் பெற்ற கணினி அறிவியல் பட்டதாரிகளை பணியில் அமர்த்திக் கொள்ள அரசாணை பிறப்பித்துள்ளது.
814 பணியிடங்கள்: இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது . 814 பணியிடங்களில் உள்ள சட்ட சிக்கல்களை முடித்து வைத்து பணியிடங்களை, அரசு உடனே நிரந்தர பணியிடமாக நிரப்ப வேண்டும்.
நேரில் வலியுறுத்தல்: வரும் வாரங்ககளில் சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் நேரில் சென்று வலியுறுத்த உள்ளோம். ஆறாம் வகுப்பு முதல் 10- ம் வகுப்பு வரை 6-வது தனி பாடமாக கணினி அறிவியல் பாடத்தை உடனே நடைமுறைபடுத்த வேண்டும்.
தமிழக அரசுக்கு கோரிக்கை: அறிவியலில் இணைத்து கணினி அறிவியல் பாடத்தின் தனித்துவத்தை பாழடைய செய்வதை நிறுத்த வேண்டும். இக் கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும். மேலும், முக்கிய எதிர்கட்சித்தலைவர்கள், கல்வி ஆலோசகர்களிடம் கொண்டு சேர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரியில் கூட்டம்: தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு வேல்முருகன் தலைமை தாங்கினார். முருகன் ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்தார். இக் கூட்டத்தில் எஸ்.புருஷோத்தமன், பெருமாள், குருமூர்த்தி, சிவசக்தி, சரவணன், இளையராஜா, சுதா, சிவசங்கரி, தேன்மொழி, ராஜேஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி அவர்கள் முடித்து வைத்தார்கள்.
மதுரையில் கூட்டம்: மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு செல்வம் தலைமை தாங்கினார். ஆர். எஸ். நாகையசாமி ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்தார். இக்கூட்டத்தில் சுந்தரேசன், பாண்டிதேவி, திவ்யா, மனோசித்ரா, தீபா, ரேவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர் கே.ராமநாதன் அவர்கள் முடித்து வைத்தார்கள்.
திருச்சியில் கூட்டம்: திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு தங்கதுரை தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் சிவா, முருகவேல் மற்றும் பல கணினி ஆசிரியைகள் கலந்துகொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சேகர் அவர்கள் முடித்து வைத்தார்கள்.
திருவண்ணாமலையில் கூட்டம்: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் நடைபெற்ற கூட்டத்திற்கு எஸ்.ராமசந்திரன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் ரமேஷ், எம். அன்பழகன் மற்றும் கணினி ஆசிரியைகள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர் பி.ராஜ்குமார் அவர்கள் முடித்து வைத்தார்கள்.