சில நாட்களாக தமிழகத்தில் நிலவி வரும் குளிரான வானிலைக் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் என் செல்வக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மழை, புயல் போன்ற வானிலைத் தகவலகளை சென்னை வானிலை மையம் போலவே சிலத் தனியார் அமைப்புகளும், சில தனிநபர்களும் கொடுத்து வருகின்றனர். இவர்கள் கொடுக்கும் முடிவுகள் துல்லியமாக இருப்பதால் மக்களும் அவர்களைப் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் துல்லியமான வானிலை அறிக்கைகளைக் கொடுப்பவர்களில் செல்வக்குமாரும் ஒருவர். இவர் அவ்வப்போது மழை மற்றும் வானிலை ஆகிய விவரங்களைத் துல்லியமாக கணித்து வருகிறார்.

தற்போது தமிழகம் முழுவதும் சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. சென்னைப் போன்ற தொழில் நகரங்களில் கூட குளிரின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதற்கானக் காரணம் குறித்து என் செல்வக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் ‘இலங்கை தரைப்பகுதியில் நேற்று முன் தினம் காற்றழுத்த சுழற்சி நீடித்தது.

இதுமட்டுமில்லாமல் சோமாலியா அருகே கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இது காஷ்மீர் பகுதியில் நிலவி வரும் குளிர் அலையை ஈர்க்கிறது. இச்சுழற்சி வட இந்தியாவை கடந்து தமிழக கடலோரப்பகுதியைக் கடந்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக சோமாலிய காற்றழுத்த சுழற்சியால் ஈர்க்கப்பட்டு பயனிக்கிறது. இதனால் தமிழக கடலோரப்பகுதிகளில் குளிரை ஈர்த்து காற்று செல்கிறது.

காலை நேரத்தைவிடவும் பகல் பொழுதில் காற்றின் வேகம் சற்று கூடுதலாக உள்ளது. இந்த காற்றின் வேகத்தைப் பார்த்து மீனவர்கள் அச்சப்பட வேண்டாம். அடுத்த இரு நாட்களில் இந்த பனி குறைய வாய்ப்புள்ளது. அப்போது காற்றின் வேகமும் குறையும். மேலும் அந்தமான் அருகே காற்றழுத்த சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அப்போது இந்த குளிர் அலை குறையும்’ எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *