ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தக நாள் ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பான முறையில் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடமும் சென்னை உள்பட பல நகரங்களிலும் புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக புத்தக நாளை முன்னிட்டு ஏப்ரல் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை “சென்னை புத்தகச் சங்கமம்” என்ற பெயரில் சிறப்பு புத்தக கண்காட்சி வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை புத்தகச் சங்கமத்தின் மேலாளர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “சென்னை புத்தகச் சங்கமம்” என்ற புத்தக கண்காட்சி காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியில் இலக்கியம், அறிவியல், பகுத்தறிவு, பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து துறை நூல்களும் 50 சதவீத கழிவு விலையில் கிடைக்கும்.
கண்காட்சி நடைபெறும் மூன்று நாட்களும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறுவர்களுக்கான ஓவியம், கலைப் பொருட்கள் உருவாக்குதல், கதை சொல்லுதல் ஆகிய பிரிவுகளில் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளன. போட்டிகளில் வெற்றி பெறும் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
புத்தகங்களை கடன் அட்டையைப் (கிரெடிட் கார்டு) பயன்படுத்தி வாங்கவும், ஐ.ஓ.பி வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் மூலம் பணம் எடுப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. புத்தக கண்காட்சியை பார்வையிட வரும் அனைவருக்கும் அனுமதி இலவசம். கூடுதல் விவரங்களுக்கு www.chennaiputhagasangamam.com என்ற இணையதளத்திலும், 044-26618161, 26618162, 9840132684 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary : First book fair to be conducted in Vepery on April 22nd.