12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தேர்வுத்தாள் திருத்தும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்காக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 64 மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி இன்று புதன்கிழமையுடன் முடிவடைய உள்ளதாக தேர்வுத்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்களை ‘பார்கோடு’ மூலமாக கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யும் பணி நாளை முதல் நடைபெறும் என்றும் அதன்பிறகு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அரசு தகவல் தொகுப்பு மையத்தில் மதிப்பெண்களை தொகுக்கும் பணியும், சரிபார்க்கும் பணியும் மேற்கொள்ளப்படும் என்று அரசு தேர்வுத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பின்னர் தேர்வு முடிவு வெளியாகும் நாள் குறித்த அறிவிப்பு வெளிவரும் என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary : +2 Public exam answer sheet correction work ends today.