சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி அதில் வெற்றி பெற்ற மாணவர்களில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்காக நேற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை தொடங்கிய நிலையில் முதல்கட்ட கவுன்சிலிங் ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று காலை 9.30 மணிக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் எஸ்.கீதாலட்சுமி விண்ணப்ப விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்த டிஎம்இ டாக்டர் எஸ். கீதாலட்சுமி கூறியதாவது: “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விற்பனை வரும் 28-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்படும். மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுள்ளதால் அனைத்து மாணவர்களுக்கும் விண்ணப்பங்கள் கிடைக்கும்
மேலும், விண்ணப்ப படிவங்களை www.tnhealth.org. மற்றும் www.tn.gov.in ஆகிய இணையதளத்தில் இருந்தும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் மே 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை நேரில் அல்லது தபால் மூலம் “செயலாளர், தேர்வுக்குழு, மருத்துவ கல்வி இயக்ககம், 162, பெரியார் ஈ.வே.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600010” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்கள் சாதி சான்றிதழ் நகலை கொடுத்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மற்ற பிரிவினருக்கு ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக வசூல் செய்யப்படும். விண்ணப்ப கட்டணத்தை “செயலாளர், மருத்துவ தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை 10” என்ற முகவரிக்கு டிடி எடுத்து அனுப்ப வேண்டும்.
முதல் கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், மறுக்கூட்டல் மதிப்பெண்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டால், இவற்றில் மாற்றம் செய்யப்படும் என்றும் கவுன்சலிங் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தப்படும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியுள்ளார்.
English Summary: First Set of MBBS Counselling Dates were announced. First Set starts from 19th to 25th June 2015, says Medical Education Director(DME) Dr.S.Geethalakshmi.