சென்னை: சுற்றுச்சூழலை மேம்படுத்த, விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளில், விருந்தினர்களுக்கு, பூ, பழச் செடிகள் வழங்குவதை, தோட்டக்கலை துறை ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்காக, விழாக்கள் நடத்துவோருக்கு, குறைந்த விலையில், செடிகளை விற்பனை செய்தும் வருகிறது.
விழாக்கள், பண்டிகைகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளின் போது, விருந்தினர்களுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்குவது, சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. இதை ஊக்கப்படுத்த, தோட்டக்கலை துறை சார்பில், நடவு செடிகள், பழச் செடிகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.
தமிழக தோட்டக்கலை வளர்ச்சி முகமை கட்டுப்பாட்டில், 61 அரசு தோட்டக்கலை பண்ணைகள், 19 பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் வழியாக, 2017 – 18ல், தோட்டக்கலை துறை சார்பில், 9.26 கோடி கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு, மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.
நெல்லி, சப்போட்டா, மாதுளை, புளி, எலுமிச்சை, நாவல், விளாம்பழம் போன்ற, நம் பாரம்பரிய பழக்கன்றுகள்; கறிவேப்பிலை, கொடுக்காப்புளி, முந்திரி, வேம்பு, மரவேம்பு, புங்கம், தேக்கு மற்றும் சவுக்கு மரங்கள்; மல்லிகை, அரளி போன்ற பூச்செடிகள் வழங்கப்படுகின்றன. பல்வேறு பழக்கன்றுகள் மற்றும் இதர தோட்டக்கலை பயிர்களின் நடவுச் செடிகள், விருப்பத்தின் அடிப்படையில் உற்பத்தி செய்து வழங்கப்படும்.
அழகு செடிகள், 5 முதல், 10 ரூபாய்; வேம்பு, புங்கம் போன்ற மரச்செடிகள், 10 முதல், 20 ரூபாய்; பழச்செடிகள், 8 முதல், 60 ரூபாய்; மலர் செடிகள், 8 முதல், 30 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. எனவே, பூ, பழச் செடிகள் தேவைப்படுவோர், அந்தந்த வட்டாரங்களில் செயல்படும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அல்லது மாவட்ட அளவில் செயல்படும் தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று, செடிகளுக்கு முன்பதிவு செய்யலாம்.
இது தவிர, உழவன் மொபைல் ஆப், 98940 71746 என்ற வாட்ஸ் ஆப், http://tnhorticulture.tn.gov.in/horti என்ற, இணையதள முகவரியிலும் முன்பதிவு செய்யலாம்