கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற நாளை (ஏப்ரல் 20) வியாழக்கிழமை முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்திய அரசு 6 முதல் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி வழங்க ‘குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009’ என்ற சட்டத்தை இயற்றியது. இந்த சட்டம் ஏப்ரல் 1, 2010 முதல் அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின் கீழ் சிறுபான்மையினர் அல்லாதவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில் மொத்த இடங்களில் 25 சதவீத இடங்களை ஏழை, எளிய மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், 2023-2024 ஆம் கல்வியாண்டில் தங்களது பிள்ளைகளுக்கு இலவச சேர்க்கை பெற விரும்பும் பெற்றோர் ஏப்ரல் 20 முதல் மே 18ஆம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மே 18-ஆம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் குறித்த விபரங்களும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் மே 21-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.