தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு நீட் உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் நவம்பர் 26-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்த முறை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவா்களால் நீட் பயிற்சி பெற இயலாத நிலை இருந்தது. அவற்றைப் போக்கும் வகையில் நடப்பாண்டு, பள்ளிக்கல்வித் துறை மூலம் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் இலவச நீட் பயிற்சி அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. இதற்காக ஒன்றியத்துக்கு ஒரு மையம் வீதம் 414 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு நீட் பயிற்சி மையத்துக்கு 70 மாணவ-மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா். அதன்படி, தமிழகம் முழுவதும் 29 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு நீட் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
பிளஸ் 1 வகுப்பில் 20 பேரும், பிளஸ் 2 வகுப்பில் 50 பேரும் இந்தப் பயிற்சி வகுப்புத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்பு வரும் நவம்பர்26-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அறிமுக வகுப்பு ஏற்கெனவே நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளி மாணவா்கள் விருப்பத்தின் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.