சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்த டிசம்பா் 15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு, வரியில் 5 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.5,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

2022-23-ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் அரையாண்டுக்கான சொத்துவரி சீராய்வின்படி, சொத்து உரிமையாளர்களால் அக்டோபர் 10-ம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

சொத்துவரி சீராய்வின்படி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை தனி வட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை 5 லட்சத்து 92 ஆயிரம் சொத்து உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தியுள்ளனர்.

சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி, உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், வட்டி இல்லாமல் செலுத்த டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இதுவரை சொத்து வரியை செலுத்தாத சொத்து உரிமையாளர்கள், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி டிசம்பர் 15-ந் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தி 2% தனி வட்டியினை தவிர்க்குமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *