விஜய் நடித்த ‘புலி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 17ல் இருந்து அக்டோபர் 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதால், செப்டம்பர் 17ஆம் தேதி தங்கள் படத்தை ரிலீஸ் செய்ய பல நடிகர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் தனது ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தை விஜய் விட்டுக்கொடுத்த அந்த தேதியில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ படம் வெளிவந்ததை அடுத்து அவருடைய எந்த படமும் சுமார் எட்டு மாதங்களில் ரிலீஸ் ஆகவில்லை. ஜி.வி.பிரகாஷ் நடித்த பென்சில், “த்ரிஷா இல்லைனா நயன்தாரா” ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராக இருந்தபோதிலும் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் தயாரிப்பாளர்கள் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தை செப்டம்பர் 17ல் ரிலீஸ் ஆகவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ், கயல்’ ஆனந்தி, மனிஷா யாதவ், விடிவி கணேஷ், மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படத்தில் சிம்ரன், ப்ரியா ஆனந்த் மற்றும் யூகிசேது ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அந்தோணி ரூபன் படத்தொகுப்பும், ரிச்சர்ட் என்.நாதன் ஒளிப்பதிவும் செய்துள்ளனர். இந்த படத்தை சி.ஜே.ஜெயகுமார் தயாரித்துள்ளார். இந்த படம் ரிலீஸாகும் தினமான செப்டம்பர் 17ஆம் தேதி, இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
“த்ரிஷா இல்லைனா நயன்தாரா” படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
English Summary:G.V. Prakash Caught a Vijay Place.