இந்துக்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடும் ‘விநாயகர் சதூர்த்தி பண்டிகை வரும் 17ஆம் தேதி இந்தியா முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் சென்னை மக்களும் மிகச்சிறப்பாக விநாயகர் சதூர்த்தி நாளை கொண்டாட திட்டமிட்டுள்ள நிலையில், முன்னிட்டு அன்றைய தினத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் உள்ள பல வீதிகளில் வருடந்தோரும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதுபோல விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இந்து முன்னணி உள்பட ஒருசில இந்து அமைப்பினர் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 2,100 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆண்டு கூடுதலாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலை வைக்க காவல்துறையினர்களிடம் அனுமதி கேட்டுள்ளதாகத் தெரிகிறது. கூடுதல் சிலைகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து காவல் துறையின் உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி தினமான வருகிற 17-ஆம் தேதி அன்று பூஜைக்காக வைக்கப்படும் சிலைகள் 3 நாள்களுக்குப் பிறகு நகரின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வங்காள விரிகுடாவில் கரைக்கப்படும்.
இது தொடர்பாக காவல் உதவி ஆணையர்கள் தலைமையில் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டத்தில் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்படவுள்ள சிலைகளின் எண்ணிக்கை, சிலை வைக்கும் அமைப்புகளின் விவரம் போன்றவை குறித்த பட்டியலை தயார் செய்வது குறித்து விவாதித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். விநாயகர் சிலைகளை பூஜைக்காக வைப்பவர்கள், சிலைகளைப் பாதுகாக்கும் பணியில் போலீஸாருடன் இணைந்து செயல்பட வேண்டும். மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் ஒலி பெருக்கியில் யாரும் கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது.
விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கும் விழா குழுவினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல் பணியிலும் ஈடுபட வேண்டும்; பிரச்னைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும்; அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மெரீனா கடற்கரையில் பிரத்யேகமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. ராட்சத கிரேன்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பான முறையிலேயே விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்படும்.
விநாயகர் சதுர்த்தி தொடர்பாக என்னென்ன செய்ய வேண்டும்? எதையெல்லாம் செய்யக்கூடாது? என்பது பற்றிய விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் வெளியிடப்படும். எனவே விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளித்து அமைதியான முறையில் விழா நடைபெற துணை புரிய வேண்டும் என்று அவர் கூறினார்
English Summary:Ganesha Chaturthi Day in Chennai.Intensity of Security Delivery.