பண்டிகை காலத்தை முன்னிட்டு, வீடுகளுக்கு, சமையல், ‘காஸ்’ சிலிண்டர்களை, விரைவாக சப்ளை செய்யும்படி, காஸ் ஏஜென்சிகளை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.
தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 1.90 கோடி, வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களின் வீடுகளுக்கு, 1,200 காஸ் ஏஜென்சிகள் வாயிலாக, சிலிண்டர் வினியோகம் செய்யப்படுகிறது.பண்டிகை காலம் என்பதால், தற்போது, வீடுகளுக்கு, உடனுக்குடன் சிலிண்டர் சப்ளை செய்யும்படி, ஏஜென்சிகளை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.இது குறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:பதிவு செய்த இரு தினங்களுக்குள், சிலிண்டர் சப்ளை செய்யப்படு கிறது.
கிராமங்களில், மூன்று நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. இது குறித்து, ஏஜென்சிகளிடம் கேட்ட போது, ‘மழை பெய்யும் இடங்களில், சிலிண்டர் சப்ளையில் சிரமம் ஏற்படுகிறது’ என்றனர்.மழை மற்றும் வெள்ளத்தால், சிலிண்டர் சப்ளை பாதிக்கக்கூடாது என்பதற்காக, தேவையை விட கூடுதலாக, சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டு, உடனுக்குடன் ஏஜென்சிகளுக்கு அனுப்பப்படுகின்றன. பண்டிகை காலம் என்பதால், வீடுகளில் வழக்கத்தை விட, சிலிண்டர் பயன்பாடு அதிகம் இருக்கும்.
இதனால், பதிவு செய்த மறு நாளே, சப்ளை செய்யும்படி, ஏஜென்சிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. தாமத சப்ளை, கூடுதல் பணம் வசூல் குறித்து, முறைப்படி புகார் அளித்தால், சம்பந்தப்பட்டோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.