மாற்றுத்திறனாளியாக வாழ்ந்து வரும் பலர் தங்கள் உடலில் ஊனம் இருந்தாலும் மனதில் ஊனம் இல்லாது தங்களது விடாமுயற்சியால் பல்வேறு சாதனைகளை செய்து வருவதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவி ஒருவருக்கு இரு கைகளும் இல்லை. இருப்பினும் கால்களால் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு சமீபத்தில் பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மன்னர் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெற மேடைக்கு வந்த மாணவி கோ.தாமரைச்செல்வி என்பவர் எம்ஃபில் பட்டத்தை அளிக்க முயன்றார் விழாவின் சிறப்பு விருந்தினரான திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் சி.திருச்செல்வம். ஆனால் பட்டத்தை வாங்காமல் அந்த மாணவி அமைதி காக்க, அரங்கத்தில் இருந்தவர்களுக்கு அதிர்ச்சி. அப்போது, மேடைக்கு ஓடிவந்த அவரது தோழி, பட்டத்தை வாங்கினார். அப்போதுதான் சபையினருக்குத் தெரிந்தது தாமரைச்செல்விக்கு இரு கைகளும் இல்லை என்று. இரு கரங்கள் இல்லாவிடினும் கால்களைக் கொண்டே தேர்வு எழுதி தமிழகத்திலேயே முதன் முறையாக எம்ஃபில் பட்டம் பெற்றுச் சாதித்த அந்த மாணவிக்கு கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர்
இதுகுறித்து மாணவி கோ.தாமரைச்செல்வி செய்தியாளர்களிடம் கூறியபோது: புதுக்கோட்டை மாவட்டம் கணபதிபுரத்தில் பிறவியிலேயே இரு கைகளும் இல்லாத நிலையில் பிறந்தேன். தந்தை 10 ஆண்டுகளுக்கு முன்பும், தாய் 5 ஆண்டுகளுக்கு முன்பும் இறந்துவிட்டனர்.
இளநிலை தமிழ் பட்டப்படிப்பை புதுக்கோட்டையில் தனியார் கல்லூரியில் படித்தேன். ஆசிரியர் பணி என்பது எனது லட்சியம். கோவை அரசு கல்வியியல் கல்லூரியில் பி.எட். முடித்தேன்.
முதுநிலை பட்டத்தையும் படித்தேன். எம்ஃபில் படித்தால் கல்லூரியில் வேலை கிடைக்குமென்றார்கள். இப்போது அதிலும் பட்டம் பெற்றுள்ளேன். இதற்கிடையில், நெட் தேர்விலும் தேர்ச்சி பெற்றேன்.
தற்போது பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். அனுபவச்சான்று இருந்தால் தான் வேலை என்கிறார்கள்.
கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு தகுதியிருந்தும், அதை மறந்துவிட்டு என்னை ஒரு மாற்றுத் திறனாளியாகவே இச்சமூகம் பார்ப்பதாக நினைக்கிறேன். அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர் பணியோ, தனியார் கல்லூரி விரிவுரையாளர் பணியோ கிடைத்தால் எனது லட்சியம் நிறைவேறும் என்று கூறினார். இவருடைய செல்போன் எண் 95854 81495. இவருக்கு வேலை அளித்து உதவ விரும்புபவர்கள் மேற்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
English Summary : Pudukkottai girl K.Thamaraiselvi finished her M.phil exams written by legs.