சென்னையில் 60வயதுக்கு மேற்பட்ட மூத்தகுடிமக்களுக்கு பேருந்துகளில் மாதம் 10 முறை இலவச பயணம் செய்யும் திட்டம் ஒன்றை சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டம் முதல்வரின் பிறந்தநாள் முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ந்ஏற்று முதல் சென்னையில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுவரை இந்த திட்டத்திற்காக 22500 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:-

தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்துள்ளபடி இந்தியாவிலேயே முதன்முறையாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு சென்னை மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டம் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இன்று (24.02.2016) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம் முதலமைச்சரால் 20.02.2016-ம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயணம் செய்ய மாநகரப் போக்குவரத்துக் கழக வலைதள முகவரியில் (www.mtcbus.org) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் இதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகள் உள்பட 42 இடங்களில் விண்ணப்பதாரர்கள் நேரில் சென்று அளித்து கட்டணமில்லா பயண அடையாள அட்டை மற்றும் மாதம் ஒன்றுக்கு தலா பத்து டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம்.

தற்போது பிப்ரவரி மாதத்திற்குரிய 10 டோக்கன்கள் மற்றும் மார்ச், ஏப்ரல், மே மாதம் முடிய தலா 10 டோக்கன்கள் வீதம் ஆக மொத்தம் 4 மாதங்களுக்கான டோக்கன்கள் தற்போதே வழங்கப்படுகிறது. கட்டணமில்லா டோக்கன்களில் அச்சடித்துள்ள மாதத்திற்கு மட்டுமே அந்தந்த டோக்கன்கள் செல்லுபடியாகும். குறிப்பிட்ட மாதம் கடந்துவிட்டால் அந்த டோக்கன்கள் காலாவதியானதாக கருதப்படும். கட்டணமில்லா பயண அட்டை மற்றும் டோக்கன்கள் குறிப்பிட்ட பேருந்து நிலையங்கள் மற்றும் மாநகர் பேருந்து பணிமனைகள் உள்பட 42 இடங்களில் அனைத்து நாட்களிலும் காலை 08.30 மணி முதல் மதியம் 01.30 வரையிலும் மதியம் 02.00 மணி முதல் மாலை 07.00 மணி வரையிலும் விண்ணப்பதாரர்களுக்கு நேரில் வழங்கப்படும். இதுவரை இத்திட்டத்தின் கீழ், சுமார் 22,500 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் அளிக்கும்போது வயது மற்றும் இருப்பிட சான்றுக்காக ஆதார் அட்டை/ வாக்காளர் அட்டை/ ஓட்டுனர் உரிமம் /ரேசன் கார்டு அல்லது பள்ளி சான்றிதழ் இதுபோன்ற சான்றின் நகல் இணைக்கப்பட வேண்டும். இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து வசதியை சென்னை மாநகர் பேருந்துகளில், இரவு நேரப் பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளிலும் (குளிர்சாதன பேருந்து நீங்கலாக) பயணம் செய்யலாம்.

தொழில் மற்றும் போக்குவரத்துறை அமைச்சர் பி.தங்கமணி இன்று (24.02.2016) மாநகர பேருந்தில் பயணம் செய்த மூத்த குடிமக்களிடம் நேரடியாக சென்று திட்டம் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பாலகிருஷ்ணசாமி உடனிருந்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Senior citizen’s above 60 can now travel 10 times free per month in bus.