ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ‘தனி ஒருவன்’ திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸாகவுள்ளது. தில்லாலங்கடி’ படத்திற்கு பின்னர் ஜெயம் சகோதரர்கள் மீண்டும் இணையும் இந்த திரைப்படத்திற்கு ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் படக்குழுவினர்களுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி தரும் செய்தியாக இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. இந்த தகவல் தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய தினம் ஓணம் விடுமுறை என்பதால் இன்று அதிகாலை காட்சியையும் திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த செய்தி உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் தமிழகத்தில் சுமார் 360 திரையரங்குகளில் ரிலீஸாகும் இந்த படம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு தொடர் விடுமுறை உள்ளதால் மிகப்பெரிய வசூலை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களை மட்டுமே தமிழில் ரீமேக் செய்து வந்த இயக்குனர் ஜெயம் ராஜா முதன்முதலாக இந்த படத்திற்காக ஒரிஜினலாக ஸ்கிரிப்ட் எழுதி இயக்கியுள்ளார். மேலும் பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர்களான சுபாவின் வசனங்களில் இந்த படம் உருவாகியுள்ளது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இவர்கள் ஏற்கனவே ‘ஐ’, ‘அனேகன்’ ஆகிய பல படங்களுக்கு வசனமெழுதியுள்ளனர்.

இந்த படத்தில் ஜெயம் ராஜா, நயன்தாரா, கணேஷ் வெங்கட்ராமன், அரவிந்தசாமி, நாசர், வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா, சஞ்சனா சிங் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவும், கோபிகிருஷ்ணா படத்தொகுப்பும் செய்துள்ளனர். ஆம்பள’, ‘இன்று நேற்று நாளை’ படங்களுக்கு படத்திற்கு பின்னர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வெளியாகவுள்ள 3வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary : Govenment tax exemption was given to “Thani Oruvan” film.