இந்தியன் ரயில்வே துறையில் காலியாகவுள்ள 3,273 சீனியர் மற்றும் ஜூனியர் இன்ஜினீயர்கள் பணிகளுக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வை இந்தியன் ரயில்வே முதன்முதலாக ஆன்லைனில் நடத்தவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை நாடு முழுதும் இந்தத் தேர்வுகளை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) ஆன்லைனில் நடத்துகிறது. ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் உட்பட 242 நகரங்களில் பொறியாளர் பணிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து இந்தியன் ரயில்வே சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “இந்தத் ஆன்லைன் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களும் ஆன்லைனில் வரவேற்கப்பட்டுள்ளன. கணினி அடிப்படையில் நடத்தப்படும் இந்த மிகப்பெரியத் தேர்வுக்கு இதுவரை சுமார் 18 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் உறுதியளித்துள்ளது.

இந்த ஆன்லைன் தேர்வு முறை பயனாளருக்கு சவுகரியமானதாக இருக்கும், தவறுகள் இல்லாத முறையில் அனைத்தும் நடைபெறும். தேர்வு எழுதுபவர்கள் ஒரு கேள்வியிலிருந்து அடுத்த கேள்விக்கு எளிதில் செல்ல முடியும். மாநில மொழிகளிலும் வாசிக்கலாம், எழுதலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முயற்சிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த ரயில்வே தேர்வுகளும் ஆன்லைனிலேயே நடத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary : Indian Railway has decided to conduct exams through online for 3,273 junior and senior engineers.