சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் அமைந்துள்ள இஸ்கான் கோயிலில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் சென்னை இஸ்கான் கோயிலில் செப்டம்பர் 5 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெறவுள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் நீத்தி ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நீர்த்திராவ் மேலும் கூறியதாவது: சென்னை சோழிங்கநல்லூர் அக்கரையில் அமைந்துள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோயில் 2012 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அப்போதிலிருந்து ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கடந்தாண்டு சுமார் 60 ஆயிரம் பக்தர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் சுவாமி தரிசனம் செய்தனர். இந்தாண்டு நடைபெறவுள்ள விழாவில் ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 5 ஆம் தேதி காலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர் வசதி மற்றும் உணவு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ண ஜெயந்தி நாளில் இரவு 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அதன் பின்னர் உபன்யாஸமும் நடைபெறும். இங்கு வரும் பக்தர்கள் வாழ்வில் தெய்வீக மாற்றம் பெறுவர் என்றார் நீத்தி ராவ்.

English Summary : Krishna jayanthi festival to be conducted in Iskcon temple on September 5.J