சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அதற்கு முந்தைய நாளான போகி பண்டிகை அன்று உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அசாணையில், அரசு ஊழியர்கள் வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி, பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் திருநாளை கொண்டாட ஏதுவாக, வருகிற 14ம் தேதி திங்கட்கிழமையும், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், பிப்ரவரி 9ம் தேதி சனிக்கிழமையன்று, பணி நாளாக அறிவித்து ஆணை வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி 14-ம் தேதி விடுமுறை என்பதால் 12-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தொடர்ந்து 6 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.