சதுர்த்தி திதி விநாயகருக்கு மிகவும் உகந்த நாளாகும். சுக்ல பட்சம் வளர்பிறை சதுர்த்தியை வர சதுர்த்தி என்றும், கிருஷ்ண பட்சம் தேய் பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் கூறுவார்கள்.

சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம். விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்தது சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும்.

சங்கடங்களைத் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் மற்றும் அதனை கடைப்பிடிக்கும் நெறிமுறைகளும், அதனால் ஏற்படும் நன்மைகளும் பற்றிய தொகுப்பு

சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை

‘மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே…’

என்ற ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கினால் எல்லாச் சங்கடங்களும் நீங்கி, சகல சௌபாக்யங்களையும் பெறலாம்.

விரதம் இருக்கும் முறை:

காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து, விநாயகர் சந்நிதிக்குச் சென்று, அவரை வழிபட்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்று முழுக்க உபவாசம் இருக்க வேண்டும். மாலையில், விநாயகர் கோயிலுக்குச் சென்று, சங்கட ஹர சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை 21 முறை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். ஓம் நமோ மதமோதித ஹேரம்ப மம சங்கடம் நிவாரய நிவாரய 21 முறை பாராயணம் செய்து 21 முறை சாஷ்டாங்க நமஸ்காரம் 2 தேங்காய், பழங்கள்ளுடன் 21 கொழுக்கட்டைகள் நிவேதனம் செய்யவும். பிறகு, வீடு திரும்பி, சந்திரன் உதயமானதும், அதைப் பார்த்து வணங்க வேண்டும். பிறகு, நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விநாயகரை வணங்கி விரதத்தை முடித்துக்கொள்ளலாம். பின் சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம். அன்றைய தினம் முழுக்க விநாயகரைத் துதிப்பது நற்பலன்களைத் தரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *