தீபாவளி பண்டிகையையொட்டி ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். கடந்த 6 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஆண்டும் அதே போன்று 78 நாள் சம்பளத்தை போனசாக வழங்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரெயில்வே சங்கங்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது தொடர்பான முன் மொழிவுக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பாக இந்திய ரெயில்வே ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் எம்.ராகவய்யா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டில் ரெயில்வே ரூ.16 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. மேலும் 1,161 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்தது. எனவே 80 நாள் சம்பளத்தை போனசாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். ஆனாலும் 78 நாள் சம்பளத்தை போனசாக பெறுவதற்கு ஒப்புக்கொண்டோம்’’ என்றார்.
ரெயில்வே துறையில் 12.26 லட்சம் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது. இதனால் அரசுக்கு ரூ.2000 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.