கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள 2668 அடி உயர மலை உச்சியில் இன்று மகா தீபம் ஏற்றப்பட்டது.
பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 16–ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாட வீதிகளில் விநாயகர், சந்திரசேகரர் பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
மாலையில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினார்கள். அதைத்தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் சாமி சன்னதியில் இருந்து ஆடியபடி கோவில் கொடிமரம் முன்பு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சரியாக மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்பட்டது.
அதே நேரத்தில் 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
கோவிலில் உள்ள பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர். மகாதீபம் ஏற்றிய பிறகு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின் விளக்குகளை போட்டனர். வீடுகள் மட்டுமின்றி தெருக்களிலும் பொதுமக்கள் அகல் விளக்கினையும் ஏற்ற ஆனந்தமடைந்தனர்.
English Summary:Great light mounted in Tiruvannamalai.