அரசு மானியத்துடன் ஹஜ் பயணம் மேற்கொள்ள நவம்பர் 17 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, மாநில ஹஜ் குழுவானது விண்ணப்பங்களை வரவேற்கிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் அல்லது www.hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும் பயன்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை நவம்பர் 17 -ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய இடங்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.