சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பெரும்பாலான நகரங்களில் தீபாவளிக்கு பின்னர் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று சென்னை உள்பட பல நகரங்களில் மழை பெய்யவில்லை என்றாலும் ஏற்கனவே பெய்த மழை காரணமாக பெரும்பாலான பள்ளிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய விடுமுறையை சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உறுதிப்படுத்தியுள்ளார். இதேபோல், மழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்களும் அறிவித்துள்ளனர்.
கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல மாவட்டங்களில் தொடர்ந்து விடுமுறை விடப்பட்டு வருவதால் ஆண்டு இறுதியில் வேலை நாட்களை நீட்டிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் ஆண்டுதோறும் கண்டிப்பாக குறிப்பிட்ட நாட்கள் இயங்க வேண்டும். அதன்படி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 220 நாட்களும், அதேபோல், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு 200 நாட்களும் வேலை நாட்கள் ஆகும். வேலைநாள் கணக்கீட்டுக்கு அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் கல்வி ஆண்டையும் (ஜூன்-மே) தனியார் பள்ளிகள் காலண்டர் ஆண்டையும் (ஜனவரி-டிசம்பர்) கணக்கில் எடுத்துக்கொள்கின்றன.
இதுவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு 17 நாட்கள் (சனி, ஞாயிறு நீங்கலாக) விடுமுறை விடப்பட்டுள்ளன. மேலும் பருவ மழைக்காலம் வரும் டிசம்பர் இறுதி வரை இருப்பதால் இன்னும் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படும் நிலையில் இதுபோன்ற எதிர்பாராத விடுமுறை நாட்களை சரிசெய்ய சனிக்கிழமைகளில் வகுப்பு வைத்துக்கொள்வது அல்லது அரையாண்டுத் தேர்வு விடுமுறையை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆலோசனை செய்து வருகிறது. அரையாண்டு விடுமுறையை ரத்து செய்தால் ஆசிரியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் பட்சத்தில் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து சனிக்கிழமைகளும் முழு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டு வகுப்புகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வுக் கால அட்டவணை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. மழைக காரணமாக தொடர்ந்து 2 வாரங்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டிருப்பதால் பாடங்கள் நடத்தி முடிக்கப்படவில்லை என்றும் அதனால் டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கவுள்ள பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “கனமழைக்காக விடப்பட்ட விடுமுறை நாட்களை சரிகட்ட அரையாண்டுத் தேர்வு விடுமுறை ரத்துசெய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட வேலை நாட்கள் குறையும்பட்சத்தில் ஆண்டு இறுதியில் வேலை நாட்களை நீட்டித்துக் கொள்ளலாம்” என்று கூறியுள்ளனர்.
english summary-Half Yearly Exams to Get Postponed to Dec End