தமிழகத்தில் கோவை, தேனி, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இன்று (மே 31) இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு (ஜூன் 1, 2, 3) இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை 84 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும்.
மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள், தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் ஜூன் 2, 3-ம் தேதிகளில் செல்ல வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.