தென்மேற்கு பருவமழை இரண்டு மாதங்களாக நாடு முழுவதும் பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தென் மாநிலங்களில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தமிழகத்தின் மலைப்பகுதி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.
இந்தநிலையில் ஒருவாரமாக மிரட்டிய கனமழை நேற்று முதல் குறையத் தொடங்கி உள்ளது. நாளை முதல் இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருநெல்வேலி, தேனி மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலின் வடமேற்கு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலா 11 செ.மீ. மழை பெய்துள்ளது. சின்னகல்லார் 10 செ.மீ., வால்பாறை 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.