சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நீர் இன்னும் ஒருசில இடங்களில் வடியாததால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று புதன்கிழமையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை மற்றும் கடலூர், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மிக பலத்த மழை பெய்தது. சென்னையில் கடந்த எப்போதும் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டி தீர்த்தது. நேற்றைய நிலவரப்படி திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. மேலும், கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கனமழை பெய்யத்துவங்கியுள்ளது. நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் தொடர்மழை பெய்துவருகிறது.
மேலும் வடகிழக்கு பருவமழை ஆந்திராவை நோக்கி நகர்ந்ததை அடுத்து நெல்லூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை பெய்துவருகிறது. இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம், பூண்டி, செம்பரப்பாக்கம், செங்குன்றம் ஏரிகளில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக மக்கள் வெளியே வராமல் முடங்கி கிடந்ததால் சென்னை நகரில் பஸ் சேவையும் சற்று குறைக்கப்பட்டு இருந்தன. நேற்று முதல் மழை படிப்படியாக குறைந்தது. வெள்ள நீரும் சாலைகளில் இருந்து வடிய தொடங்கின. இதனால் இன்று முதல் மாநகர போக்குவரத்து கழகம் பஸ் சேவையை தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்க தினமும் 3585 பஸ்கள் இயக்கப்படும் அவை அனைத்தும் நேற்று இயக்கப்பட்டன.
இது குறித்து உயர் அதிகாரி கூறியதாவது: பலத்த மழை வெள்ளத்தால் பஸ் சேவை குறைக்கப்பட்டாலும் மக்களுக்கு பாதுகாப்பான சேவையை வழங்கினோம். எவ்வித பாதிப்பும், சேதமும் பொதுக்களுக்கு ஏற்படாத வகையில் பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டது.
இன்று முதல் முழு அளவில் பஸ் சேவை அளிக்கப்படுகிறது. மழைநீர் வடிந்த பகுதிகளிலும், வடியாத பகுதிகளிலும் கூட பஸ்களை இயக்கும் சூழல் இருந்தால் போக்குவரத்து தடையில்லாமல் செயல்படும்.
கடந்த 4 நாட்களாக குறைந்த சேவையால் நஷ்டம் ஏற்பட்டாலும் அதனை போக்குவரத்து கழகம் ஏற்று கொள்ளும். செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் 3 அடிக்கு மேல் மழைநீர் தேங்கி நின்றாலும் பொதுமக்கள் நலன் கருதி பஸ்களை இயக்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மின் நுகர்வோர் நவம்பர் 30-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பருவமழையின் காரணமாக, இந்த மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, நவம்பர் 16 முதல் 29 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோர் 30-ஆம் தேதி வரை அபராதமின்றி மின் கட்டணம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary-Heavy rains to give relief to people across Chennai.