தமிழகத்தில் 10 இடங்களில் வியாழக்கிழமை வெப்பநிலை சதமடித்தது.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் காரணமாக, வெப்பத்தின் தாக்கம் கடந்த சில நாள்களாக உயர்ந்து வருகிறது. இதே நிலைமை வியாழக்கிழமையும் நீடித்தது. தமிழகத்தின் 10 இடங்களில் வெப்பநிலை சதமடித்தது. அதிகபட்சமாக கரூர்பரமத்தி, மதுரை, சேலத்தில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. தருமபுரி, திருச்சி, திருத்தணியில் தலா 104 டிகிரியும், நாமக்கல், பாளையங்கோட்டை, வேலூரில் தலா 103 டிகிரியும், கோயம்புத்தூரில் 101 டிகிரியும் பதிவானது.
வெப்பநிலை உயர்வு குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டமின்றிக் காணப்பட்டது. அதனால், வெப்பம் அதிகரித்தது. இதுதவிர, ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக்காற்று குறைந்து, வெப்பமான தெற்கு, தென் மேற்கு திசைக்காற்று தமிழகம் நோக்கி வீசியது காரணம் ஆகும்.
வெப்பநிலை குறைய வாய்ப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 டிகிரி வரை வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது.