helmetதமிழகத்தில் சென்னை உள்பட மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகளும், அதன் பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் போடவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்பட்டு, ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹெல்மெட் அணிவதிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் விசாரணை முடிவடைந்துள்ளதாகவும் இதுகுறித்து வரும் 19-ஆம் தேதி தீர்ப்பளிப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

ஹெல்மெட் தொடர்பான வழக்கில் முந்தைய விசாரணையின்போது, “தமிழக அரசின் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும், வாகனங்களைப் பறிமுதல் செய்யக் கூடாது’ என வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் முறையிடப்பட்டது. பெண்கள், குழந்தைகளுக்கு தலைக்கவசம் அணிவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என கோரி மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்குக் கோரிய மனுக்கள் மீது ஆகஸ்ட் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி கிருபாகரன் கூறினார். மேலும் நீதிபதி இதுகுறித்து கூறும்போது, “கடற்கரை சாலையில் பலர் தலைக்கவசம் அணியாமல் செல்வதைப் பார்க்கிறேன். தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்கிற உத்தரவை அரசு தீவிரமாக அமல்படுத்துகிறதா?” என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியன், இந்த உத்தரவு தீவிரமாக அமல்படுத்தப்படுவதாக கூறியதோடு இந்த உத்தரவுக்கு பின்னர் விபத்துகள், உயிரிழப்புகள் தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்தார். அதில் “ஜனவரி மாதம் 2,784 விபத்துகளில் 599 பேர் பலியாயினர். பிப்ரவரி மாதம் 2,476 விபத்துகளில் 481 பேர் உயிரிழந்தனர். மார்ச் மாதம் 2,542 விபத்துகளில் 572 பேரும், ஏப்ரல் மாதம் 2,362 விபத்துகளில் 543 பேரும், மே மாதம் 2,460 விபத்துகளில் 599 பேரும் உயிரிழந்தனர். ஜூன் மாதம் 2,510 விபத்துகளில் 582 பேர் உயிரிழந்த நிலையில், கட்டாய தலைக்கவச உத்தரவு அமலான ஜூலை மாதத்தில் 2,313 விபத்துகளில் 498 பேர் மட்டுமே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

English Summary:Helmet Exemption For Womens,childrens?Coming 19th Judgement.