Chennai, train station
Chennai, train station

இந்தியாவின் மிக பழமையான நகரங்களில் ஒன்றாகிய சென்னை நகரை கெளரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தினம் கடந்த 376 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை மக்கள் இந்த கொண்டாட்டத்தில் மிகவும் உற்சாகமாக கலந்து கொள்வது உண்டு. இந்நிலையில் இவ்வருடம் சென்னை தினத்திற்கு பதிலாக சென்னை வாரம் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வார விழா கொண்டாட்டத்தை சிறப்பாக நடைபெறுவது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று சென்னை தாஜ் கன்னிமாரா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய கலை, கலாசார வரலாற்று அறக்கட்டளை நிர்வாகிகள், சென்னை வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இது குறித்து சென்னை வார விழா கொண்டாட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆக. 22ஆம் தேதி சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. தற்போது, சென்னை வார விழாவாக ஆக.16 முதல் ஆக.23 வரை சென்னை வாசிகள் கொண்டாட உள்ளனர். இதற்காக, வரலாற்று நடைப்பயணம், கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், ஆவண படங்கள், புகைப்படங்கள், முக்கிய வரலாற்று இடங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் சென்னையில் நடக்க உள்ளது.

மேலும், இந்த விழா கொண்டாடுவதற்கென தனிப்பட்ட அமைப்புகள் இல்லை, சென்னைவாசிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம். அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இலவசம். மேலும், பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு, வினாடி வினா, கட்டுரை போட்டிகள், புகைப்பட போட்டி உள்ளிட்டவை நடக்க உள்ளது. இந்த விழாவை கொண்டாடுவதற்கு பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சென்னை வாசிகள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த விழா குறித்த விவரங்கள் மேலும் தெரிந்து கொள்ள www.themadrasday.in,  என்ற இணையதளத்தையும் editor@madrasmusings.comintachchennai@gmail.comஆகிய மின்னஞ்சல் முகவரிகளையும் அணுகலாம்.

இது குறித்து வரலாற்று ஆய்வாளர் முத்தையா கூறியதாவது: மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயபுரம், திருவொற்றியூர் உள்ளிட்ட பல சிறு கிராமங்களின் ஒருங்கிணைப்பே சென்னை மாநகரமாக உருவாகியுள்ளது. பொதுவாக சென்னை என்றாலே பரபரப்பு, வாகன நெரிசல் என்று பேசுகிறோமே தவிர பெருமையை நினைத்துப் பார்க்கத் தவறிவிடுகிறோம். மேலும், நாம் வசிக்கும் ஊரை நாம் நேசிக்கும் போது, சமூக பொறுப்புகள், தேசப்பற்று உள்ளிட்ட விஷயங்கள் இளைய தலைமுறையினரிடையே வளரும் வகையில் அமையும் என்றார்.

English Summary:Chennai Week celebration on August 16 to 23.