சென்னை, எண்ணூர் துறைமுக இணைப்புச் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் இந்த சாலைகளின் விரிவாக்கத் திட்டப் பணிக்காக தண்டையார்பேட்டை செரியன் நகரில் வீடுகளை தமிழக அரசு கையகப்படுத்தியது. இங்கு வீடுகளை இழந்தவர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டதால் இங்கிருந்த வீடுகள் அனைத்தும் நேற்று முன் தினம் ராட்சத கிரேன்கள், புல்டோசர் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன

சென்னை, எண்ணூர் துறைமுகங்கள், வடசென்னையில் நிலவி வரும் கண்டெய்னர் லாரி போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் ரூ.600 கோடி மதிப்பீட்டில் துறைமுக இணைப்புச் சாலைகள் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, சுமார் 90 சதவீதப் பணிகள் முடிவடைந்த நிலையில், ஆங்காங்கு சில இடங்களில் சாலை அமைப்பதற்கான நிலங்களைக் கையகப்படுத்துவதில் சிக்கல்கள் இருந்தது. இந்தப் பிரச்னைக்கு அண்மையில் சுமுகத் தீர்வு ஏற்பட்டு, குடிசை மாற்று வாரியம் சார்பில் தண்டையார்பேட்டை ரங்கநாதபுரம் திட்டப் பகுதியில் 94 குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. மேலும் இடிக்கப்படும் வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகை பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டன. இதனையடுத்து, இவர்கள் புதிய வீடுகளில் அண்மையில் குடியமர்த்தப்பட்டனர். இதனையடுத்து நேற்று முன் தினம் ராட்சத கிரேன்கள், புல்டோசர்கள் உதவியுடன் செரியன் நகரில் இருந்த 41 வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டு அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் பணிகளை துறைமுக இணைப்புச் சாலை திட்ட இயக்குநர் சுரேந்திரநாத், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழக முதுநிலை மேலாளர் ரங்கராஜன், வட்டாட்சியர் சத்யபிரகாஷ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

English Summary: Houses are removed for the extension of Chennai Port Road. To decrease container lorries traffic in Chennai Port road new extension roads to be laid.