anna-univ-23111512ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரம் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முடிவு வெளிவருவதற்கு முன்பாக மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் படிப்புகளில் சேர இந்த ஆண்டு முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 15ஆம் தேதி முதல் ஆன்லைனில் மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து வருகின்றனர்.

வீட்டில் உள்ள அல்லது பிரெளசிங் செண்டர்களில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் மிகவும் எளிதான முறையில் பதிவு செய்து வைத்து 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வந்த பிறகு மதிப்பெண்களை பதிவு செய்து அதன் பின்னர் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். தேர்வு முடிவுகள் வெளிவந்து 10 நாட்கள் வரை விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து இ-சேவை மையங்களிலும் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மாணவ – மாணவிகள், பி.இ., பி.டெக்., படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி முதல் நேற்று வரையிலான காலகட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 176 பேர் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். இன்று இதன் எண்ணிக்கை 1.25 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் 61,960 பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி விட்டனர்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளிவந்தவுடன் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

English Summary: How many people have applied engineering?