தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் வெள்ளத்தால் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகளை பலர் செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ள நிவாரணத்துக்கு பொதுமக்கள் நிதியுதவி, நிவாரணப் பொருட்களை எங்கு, எப்படி அனுப்ப வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டுதல் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு, குடிநீர் என நிவாரணங்கள் வழங்கி வருகிறது.
இந்திய கப்பற்படையினைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் விசாகப்பட்டினத்திலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வந்துள்ளன. அவை அனைத்தும் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், பல தொண்டு நிறுவனங்ளும், தனியார் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி உள்ளனர். பல தன்னார்வ அமைப்புகள் நிவாரணப் பொருட்கள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.
அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இதற்கென ஏற்பட்டுத்தப்பட்டுள்ள மையத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், பல தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வெள்ள நிவாரணத்துக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவ்வாறு நிதி உதவி செய்ய விரும்புவோர் CHIEF MINISTERS PUBLIC RELIEF FUND என்ற பேரில் காசோலை/ வரைவோலை (டிடி) மூலம் நிதித்துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது நிதித் துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்தும் வழங்கலாம்.
தற்போது வெள்ள பாதிப்பு நிலைமை சீரடைந்து வருகிறது. இன்னும் ஒரிரு தினங்களில் நிலைமை முற்றிலும் சீரடைந்து விடும்.”
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரித்துள்ளார்.
English summary-How to contribute to the CMs relief fund – Tamil Nadu