flood-91215-1கடந்த ஒரு மாதமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ததால் வெள்ளத்தால் தமிழக மக்கள் பெரும் அவதிப்பட்டனர். குறிப்பாக தலைநகர் சென்னையே வெள்ளத்தால் கடந்த வாரம் ஸ்தம்பித்தது. இந்நிலையில் வெள்ளத்தால் ஏற்பட்ட குப்பைகளை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் துவங்கிய வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்துவருவதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவிற்கு வெள்ளப்பெருக்கும் அதனால் பொருட்சேதங்களும் ஏற்பட்டதோடு மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டனர்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை நகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்றவும் சுகாதார பணிகளை செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்கிடவும் மாநகராட்சி நிர்வாகம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் உட்பட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றன.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டு அங்கு தேங்கிய குப்பைகளையும், கழிவுகளையும் அகற்றி பிளிசிங் பவுடர் தெளிக்கப்படுகிறது. தொற்று நோய் பரவாமல் இருக்க மழையினால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் கிருமி நாசினியான பிளீச்சிங் பவுடர் அரை கிலோ வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 584 வாகனங்களுடன் 22,500 துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், 9 மாநகராட்சிகள் 23 நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலிருந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் 2150 பேர் 57 வாகனங்களில் வரவழைக்கப்பட்டு கடந்த இரு நாட்களாக ஓட்டுமொத்த துப்புரவு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் கடந்த இரு நாட்களில் மட்டும் 10,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சுமார் 1,00,000 மெட்ரிக் டன் கழிவு மற்றும் குப்பைகள் ஒதுங்கியுள்ளது. இதனை சாதாரணமாக அகற்றுவது என்றால் பல நாட்கள் ஆகும். இதனை கவனத்தில் கொண்டு விரைவாக குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்திட வெளி மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 300 டிப்பர் லாரிகளும், 60 ஜே.சி.பி. இயந்திரங்களும், 6250 துப்புரவு பணியாளர்களும் இன்று வரவழைக்கப்பட்டு சிறப்பு தூய்மை படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது. 101 வது கோட்டம் ஷெனாய் நகர் மாநகர் விளையாட்டு திடலில் இச்சிறப்பு துப்புரவு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வாகனங்கள் மற்றும் பணியாளர்கள் அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலுள்ள குப்பைகள் 100 சதவீதம் அகற்றும் பணி நிறைவு பெறும். அதனை தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் வழக்கமாக குப்பைகளை அகற்றி சுகாதார பணிகளில் ஈடுபடுவார்கள்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பா.வளர்மதி, செல்லூர் கே.ராஜீ, எஸ்.பி.வேலுமணி, எஸ்.கோகுல இந்திரா, மேயர் சைதை துரைசாமி, துணை மேயர் பென்சமின், அரசு முதன்மை செயலர் மற்றும் ஆணையர் விக்ரம் கபூர், துணை ஆணையர் ஆர்.கண்ணன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இத்தகவல் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெளியாகி உள்ளது.
English summary-clearance of debris in Chennai