தற்போது மாம்பழ சீசன் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்கள் பலவகையான மாம்பழங்களை வாங்கி சுவைத்து மகிழ்கின்றனர். ஆனால் மாம்பழம் சாப்பிடுபவர்களுக்கான ஒரே பயம் இந்த பழங்கள் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா? என்பதுதான். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உடலுக்கு தீங்கை விளைவிக்கும். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு பல தொல்லைகளை தரும். எனவே நல்ல தரமான பழங்களை பார்த்து வாங்குமாறு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு கூடுதலாகப் பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது. செந்தூரம், பங்கனப்பள்ளி ரகங்களை பொதுமக்கள் மிகவும் விரும்பி வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர். எனினும் கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும் மாம்பழங்கள் குறித்தும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கூறியதாவது: மாங்காய்களை பொதுவாக வைக்கோல் உள்ளிட்ட வெப்பம் தருபவற்றில் வைத்தால் எத்திலீன் சுரப்பு மூலம் 2 நாள்களில் நன்றாக பழுத்து சாப்பிட உகந்ததாக மாறும். நேரச் சிக்கனம் கருதி சில வியாபாரிகள் கார்பைடு கல் மூலம் மாம்பழங்களைப் பழுக்க வைக்கிறார்கள். கார்பைடு கல்லில் உள்ள அசிட்டிலீன் எனப்படும் வாயுவின் காரணமாக ஒரே நாளில் பழுத்த நிலையை அடையும். ஆனால், இது சாப்பிட உகந்தது அல்ல. வெம்பிப் பழுக்கும் நிலையைப் போன்றது. இதனை சாப்பிட்டால் வயிற்றுவலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்படும்.
கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களில் லேசான வெளிர்மஞ்சள் புள்ளிகளைக் காண முடியும். காம்பு பகுதியில் வெட்டிச் சாப்பிட்டு பார்த்தால் புளிப்புச் சுவையும், அதற்கான மணமும் வீசும். சந்தேகம் ஏற்படும் பழங்களை உடனடியாக சாப்பிடாமல் குளிர்சாதன பெட்டிகளில் ஒரு நாள் வைத்து அதன் பின்பு சாப்பிட வேண்டும். அப்படிச் செய்தால் பழத்தின் தன்மை மாற வாய்ப்பு உண்டு. இதுவும் தாற்காலிகமானதே. ஆகவே, தரமான பழங்களை வாங்கிச் சாப்பிட வேண்டும்.
வியாபாரிகளும் எவ்வித விதிமீறல் செயல்களிலும் ஈடுபடாமல் மாம்பழங்களை விற்பனை செய்ய வேண்டும். இல்லையெனில் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அந்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
English Summary: How to detect the mangoes artificially ripened with carbide stones?