சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் பயணிப்பதற்கான இலவச டோக்கன்கள் வழங்கும் திட்டம் இன்று (21.12.2022) தொடங்கியுள்ளது.

மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், இலவச பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 2022 (அரையாண்டிற்கு ஒரு முறை) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, அடுத்த அரையாண்டிற்கு ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இன்று (21.12.2022) தொடங்கியுள்ளது.

கட்டணமில்லா பயண டோக்கன்கள் வழங்கப்படும் இடம்:

21 டிசம்பர் 2022 முதல் 31 ஜனவரி 2023 வரை காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை மூத்த குடிமக்களின் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள சென்னை மாநகரப் பேருந்து பணிமனைகளில் வழங்கப்படும்.

தேவையான ஆவணங்கள்:

கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும்,

மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *