சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேலும் வேலையின்றி இருப்பவர்கள் அரசின் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதன்படி மேற்கண்ட தகுதிகளை உடையவர்கள் சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் அதற்கும் குறைவான தகுதிகளை உடையவர்கள் நந்தனத்திலுள்ள தொழில் திறனற்றோருக்கான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு உயிர்ப் பதிவேட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள், கிண்டி மகளிர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த உதவித் தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
உதவித் தொகை பெறவிருக்கும் விண்ணப்பதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். ஆதி திராவிடர், பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், இதர வகுப்பினர் 40 வயதிற்குட்பட்டவராகவும், தனியார் மற்றும் சுயவேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும், ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வித் தகுதி, வயது மற்றும் வருமான வரம்பு எதுவும் இல்லை. ஏற்கனவே, உதவித் தொகை பெறுபவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
English Summary: How to Get Scholarships for educated unemployed? Chennai Collector.