சென்னை மாநகராட்சியில் இதுவரை தாமதமாக பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்பவர்களிடம் இருந்து அபராத தொகை வசூலிக்கப்பட்டதில்லை. ஆனால் இனிமேல் தாமதமாக பிறப்பு, இறப்பை பதிவு செய்பவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் பிறக்கும் குழந்தைகள், இறப்பவர்கள் ஆகியோர்களின் விவரங்கள் சென்னை மாநகராட்சி பிறப்பு-இறப்பு பதிவுத் துறையில் பதிவு செய்யப்பட்டு, அதற்குரிய சான்றிதழ்கள் இணையதளம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பிறப்பு, இறப்பைப் பதிவு செய்யவும் சான்றிதழ்களைப் பெறவும் பொதுமக்களிடம் இருந்து கட்டணம் எதுவும் சென்னை மாநகராட்சி வசூலிப்பதில்லை. அதேபோல் இதுவரை பிறப்பு, இறப்பை தாமதமாகப் பதிவு செய்யும் பொதுமக்களிடம் இருந்தும் அபராதம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் இனிமேல் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னரும் பிறப்பு, இறப்பை பதிவு செய்யாத நபர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை வட்டார அதிகாரி ஒருவர் கூறியபோது, “பொதுவாக பிறப்பு, இறப்பை 21 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தவறினால் பொதுமக்களிடம் இருந்து அபராதம் வசூலித்துக் கொள்ளலாம் என்ற விதி உள்ளது. ஆனால் தாமதமாக வரும் பொதுமக்களிடம் இருந்து அபராதம் ஏதும் வசூலிக்க வேண்டாம் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுறுத்தல் முறையாக அறிவிக்கப்படாமல், வாய்மொழி உத்தரவாக பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவைத் தான் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த பல ஆண்டுகளாக பின்பற்றி வந்தனர். தாமதமாக வரும் பொதுமக்களிடம் இருந்து அபராதம் ஏதும் வசூலிக்கப்படவில்லை.
ஆனால் தற்போது மீண்டும் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவும் முறைப்படி அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த உத்தரவை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பிறப்பு, இறப்பு நடந்து 21 நாள்கள் முதல் ஒரு வருடத்துக்குள் பதிவு செய்ய வரும் நபர்களிடம் ரூ.5, நீதிமன்ற உத்தரவு பெற்று பதிவு செய்ய வேண்டுமானால் ரூ. 10 என அபராதம் வசூலிக்கப்படும். மேலும் பிறப்பைப் பதிவு செய்துவிட்டு, ஒரு ஆண்டு கழித்து பெயர் சேர்க்க வேண்டுமானாலும் ரூ.5 அபராதம் செலுத்த வேண்டும். 21 நாள்களுக்குள் பெயரைப் பதிவு செய்ய கட்டணம் ஏதும் இல்லை.
அபராதத்தை இ-சலான் மூலம் செலுத்த வேண்டும். தாமதமாக வரும் பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் இ-சலான் எடுத்துக் கொண்டு ரிப்பன் கட்டடத்தில் உள்ள கருவூலத்தில் அபராதத்தை செலுத்த வேண்டும். அனைத்து மண்டலங்களுக்கும் இது குறித்த உத்தரவு சில வாரங்களுக்கு முன்பு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அபராதத்தை தவிர்க்கும் வகையில் சென்னை நகர மக்கள் பிறப்பு மற்றும் இறப்பை 21 நாட்களுக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
English Summary:If the late birth and death registration penalty .chennai corporation directive