அடுத்த ஆண்டு அதாவது 2016ஆம் ஆண்டில் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் படிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் 600 மாணவர்களுக்கு இலவசமாக வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழக-தொழில் கூட்டுறவு மையமும், “ரெனால்ட் நிஸ்ஸான்’ தொழில்நுட்ப வர்த்தக மையம் என்ற இந்திய தனியார் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. இந்த அரிய வாய்ப்பினை அடுத்த ஆண்டு படிப்பை முடிக்கும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியுள்ளதாவது: “விஷன் தமிழ்நாடு 2023′ திட்டம் பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்து வருகின்றன.
இதனால், பயிற்சிபெற்ற திறன்மிக்க மனித ஆற்றலின் தேவை அதிகரித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம், ரெனால்ட் நிஸ்ஸான் தொழில்நுட்ப வர்த்தக மைய நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், இணைப்புக் கல்லூரிகளில் இயந்திரவியல், ஆட்டோமொபைல், உற்பத்தி, மெட்டாலரஜி உள்ளிட்ட துறைகளில் இருந்து 2016-இல் படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு இந்த இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
சென்னை, மதுரை, கோவை என மூன்று மண்டலங்களில், மண்டலத்துக்கு 200 பேர் வீதம் 600 பேருக்கு 10 நாள்கள் இந்தப் பயிற்சி அளிக்கப்படும். அதுமட்டுமின்றி ரெனால்ட் நிஸ்ஸான் தொழில்நுட்ப நிறுவனம், நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு திட்டத்தின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும் 40 மாணவிகள், 20 மாணவர்கள் என மொத்தம் 60 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்க உள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 துறைகளில் பல்வேறு பொறியியல் பிரிவுகளின் கீழ் படிப்பில் சிறந்து விளங்கும் இறுதியாண்டு மாணவர்கள் 60 பேருக்கு மேம்பட்ட திறன் வளர்ப்புப் பயிற்சித் திட்டமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary:In 2016 the free skills training for 600 students to graduate. Anna University