சென்னை: தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கோடை வெயில் அதிகரித்ததால் வெப்பநிலை கடுமையாக உயர்ந்துள்ளது. பகல் நேரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்த துவங்கியுள்ளது. தமிழகம், புதுச்சேரியிலும் வெயில் தீவிரம் அடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் மாலை நேரங்களில் கடல் காற்று வீசுவதால் மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டும் வெப்பத்தின் தாக்கம் குறைந்து இருந்தது. இந்நிலையில் இரு தினங்களாக கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இரவில் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் மற்ற மாவட்டங்களிலும் புழுக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்றைய வெப்பநிலையை பொறுத்தவரை 10 மாவட்டங்களில் இயல்பு நிலையை விட 3 டிகிரி செல்ஷியஸ் வெயில் அதிகரித்துள்ளது.
வேலுார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில், வறண்ட வானிலை காணப்பட்டது. தமிழகத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 40 டிகிரி செல்ஷியஸ் பதிவானது. திருத்தணி, மதுரை, கோவையில், 39 சென்னை நுங்கம்பாக்கம், 34 சென்னை விமான நிலையம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுவதும் வறண்ட வானிலையே நிலவும். சில இடங்களில் வெப்ப சலன மழை பெய்யலாம் என வானிலை மையம் கணித்துள்ளது.