கடந்த ஆண்டு தமிழகம் முழுவதுமே மழை பொய்த்துப்போனது. வழக்கமாக பெய்யும் மழையை விட, மிகக் குறைந்த அளவே மழை பெய்தது. குறிப்பாக சென்னை ஓரிரு நாட்கள் மட்டுமே மழை பெய்தது. இதனால் தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் திண்டாட்டம் தற்போதே தொடங்கிவிட்டது என்றே கூறலாம். ஆனால் அதனை சரிசெய்யும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.
இந்த சூழலில் காற்றில் ஈரப்பதும் குறைந்துள்ளதாகவும் மேக மூட்டங்கள் காணப்படாததால் குமரி முதல் வட கர்நாடகம் வரை உள்ள பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதாக சென்னை வானிலை மையம் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நாளை முதல் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியல் வரை வெயில் அதிகரிக்கக்கூடும் என்றும் வெப்பச்சலனம் காரணமாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்த்துள்ளது. மேலும் சென்னையில் தெளிவான வானிலையே நிலவும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.